சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிட்ராகிளிப் சிகிச்சையை வெற்றிகர மாக செய்து கொண்டவர்களுடன் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ், அப்போலோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி. 
தமிழகம்

ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

சென்னை அப்போலோ மருத்துவமனை ஒரே நாளில் அடுத்தடுத்து 4 பேருக்கு மிட்ராகிளிப் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மிட்ராகிளிப் எனப்படும் மிகநுண்ணிய துளையிடல் முறையிலான சிகிச்சை மூலம் இதயத்துக்கு மிட்ரல் வால்வு பொருத்தும் சிகிச்சையை, அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் ஒரே நாளில் 4 பேருக்கு வெற்றிகரமாக செய்துள்ளனர். இதன் வாயிலாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகள் விரைந்து குணமடைந்து, மறுநாளே வீடு திரும்பியுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 3 நோயாளிகளுக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது சென்னை அப்போலோவில் 4 மிட்ராகிளிப் சிகிச்சை செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை குழுமதலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது: ஆசிய கண்டத்தில் பல முதல் மைல்கல் சாதனைகளை எங்களது அறுவை சிகிச்சை நிபுணர்கள் படைத்து வருகிறார்கள். எங்களிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அவர்களுக்கேற்ற சுகாதார தீர்வுகளை வழங்குவதை நாங்கள் உறுதி செய்துவருகிறோம்.

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மிட்ராகிளிப் சிகிச்சை செய்வதற்கு இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற சில மருத்துவமனைகளில் அப்போலோவும் ஒன்று என்பதில் பெருமைப்படுகிறோம்.

மற்ற நாடுகளில், இதுபோன்ற சிகிச்சைக்கு செலவாகும் தொகையை விட, அப்போலோவில் 3 மடங்கு குறைவாகவே உள்ளது. மேலும், மற்ற டாக்டர்களை விடஇந்திய டாக்டர்கள் அன்பு, அக்கறை, பொறுப்பு உணர்வுடன் சிகிச்சை அளிப்பதால், நோயாளிகள் தன்னம்பிக்கை பெறுகின்றனர். டாக்டர் சாய் சதீஷ், புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் சிறந்தவராக உள்ளார். அவரது இதுபோன்ற அறுவை சிகிச்சையால், நோயாளிகள் மறுநாளே நடக்கின்றனர். இதுபோன்ற டாக்டர்களால்தான், அப்போலோ மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் கூறியதாவது:

இதய சிகிச்சையில், மிட்ரல் வால்வு சிகிச்சை முன்னோடியாக உள்ளது. மிக மெல்லிய துளையிடல் மூலமான சிகிச்சை என்பதால், உடல் பலவீனமானவர்கள், வயதானவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது.

ஒரே நாளில் 2 பேருக்கு மட்டுமேஇந்த சிகிச்சையை செய்ய திட்டமிட்டோம். ஆனால், மேலும் 2 நோயாளிகளுக்கு அவசர தேவை ஏற்பட்டதால், உடனடியாக அவர்களுக்கும் அனுபவமிக்க எங்களது குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்த சிகிச்சை முறையால், நோயாளிகள் மறுநாளே வீட்டுக்குசெல்வதுடன், 60 வயதிலும் 40 வயது உடைய மனநிலையில் இயல்பாக வாழ்கின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில், அப்போலோ மருத்துவமனைகளின் குழும துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT