திருமங்கலம் அருகே அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குடோனில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி கணினி, துணிகளைப் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிலதிபர்கள் சங்கத்துக்குரிய கட்டிடம் ஒன்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாடகைக்கு எடுத்து, அதை குடோனாகப் பயன்படுத்தி வந்தார்.
இங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகப் பரிசுப் பொருட் கள் வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் தேர்தல் அதிகாரி சவுந்தர்யா, வட்டாட்சியர்கள் முத்துப்பாண்டி, சசிகலா, திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது காகிதக் கவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் வாளிகள், டீ-சர்ட்டுகள், சேலைகள், துண்டுகள், 300-க்கும் மேற்பட்ட கணினிகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அம்மா சேரிடபிள் டிரஸ்ட் மூலம் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பிற சங்கங்களுக்கு இலவசமாக வழங்க வாங்கியதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குடோனில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி கள் கூறும்போது, இடப்பற்றாக் குறையால் அரசு அலுவலகம் ஒன்றில் பொருட்களை மாற்றி, அந்த அலுவலக அறைக்கு சீல் வைக்கப்படும். தொழிலதிபர்களுக்கு சொந்தமான குடோன் என்பதால் சீல் வைக்க முடியவில்லை. பறிமுதல் செய்த பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றனர்.