தமிழகம்

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா: மக்களைக் கவர்ந்த விசில் பாடல்கள்

செய்திப்பிரிவு

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா நேற்று நடைபெற்றது. இந்த வாரம் இந்திய விசில் சங்கத்தினர் விசில் மூலம் திரைப்படப் பாடல்கள் பாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

“நம்ம சென்னை நமக்கே” என்ற கருப்பொருளுடன், ‘தி இந்து’ நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் (ஐடிடிபி) சார்பில், சென்னையில் முதன்முறையாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் “கார்கள் இல்லாத ஞாயிறு” விழா அக்டோபர் 11-ல் தொடங்கப்பட்டது.

இவ்விழா எலியட்ஸ் கடற்கரை யில் நேற்றும் நடைபெற்றது. அதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை அச்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பின்னர் 800 மீட்டர் நீள சாலையின் நடுவில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்று, யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற்பயிற்சி, போன்றவற்றை பொதுமக்களுக்கு கற்றுக்கொடுத்தன.

டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கால்பந்து, எறிபந்து, கேரம் போன்ற விளையாட்டுகளையும் பொதுமக்கள் விளையாடினர். சிறுவர்களுக்கு ஓவிய பயிற்சி, கோட்டோவியங்களுக்கு வண்ணம் தீட்டும் பயிற்சி போன்றவையும் வழங்கப்பட்டது.

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கொசுவால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் தொடர் பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.

இதற்கிடையில் இந்திய விசில் சங்கத்தின் தென்னிந்திய பிரிவின் தலைவர் ஆர்.அருண்குமார் தலைமையிலான குழுவினர் திரைப்படப் பாடல்களை விசில் மூலம் பாடி, அங்கு வந்திருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தனர். அவர்களின் பாடல் களுக்கு பொதுமக்கள் நடனமும் ஆடினர்.

இது தொடர்பாக அருண்குமார் கூறுகையில், ‘‘விசில் மூலம் பாடல்களை பாடுவது என்பது, புல்லாங்குழலில் வரும் ஓசையை, புல்லாங்குழல் இல்லாமல் இசைப்பதுதான். இது ஒரு வகையான மூச்சுப் பயிற்சியும் கூட. இதனால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. அதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. இந்த கலையை நாங்கள் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT