தாராபுரத்தில் திமுக நகரச் செயலாளர் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றதால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார். 
தமிழகம்

தாராபுரம் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை: திமுக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு

எம்.நாகராஜன்

தாராபுரத்தில் திமுக, மதிமுக நிர்வாகிகளின் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திமுகவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மதிமுக மாவட்டத் துணைச் செயலாளரும், தொழிலதிபருமான கவின் நாகராஜ் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியது.

அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகரன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இச்சோதனை இரவு 7 மணியைக் கடந்தும் நீடித்தது. இச்சோதனையில் ஒரு பெண் அதிகாரி உட்பட 7 பேர் அடங்கிய குழுவினர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதை அறிந்த தாராபுரம் போலீஸார், சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திடீர் சோதனை நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள், வேட்பாளர், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சோதனை நடைபெற்ற இடங்களின் முன்பாகத் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து திமுக மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் கூறும்போது, ''தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற மனநிலைக்கு ஆளும் கட்சியினர் வந்துள்ளதன் விளைவுதான் இதுபோன்ற மறைமுக மிரட்டல்கள். இது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது அவர்களின் நோக்கம். என்ன நடந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது'' என்றார்.

SCROLL FOR NEXT