தமிழகம்

தமிழகத்தில் ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நிதி ஒதுக்கீடு: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி பேட்டி

இ.மணிகண்டன்

தமிழகத்தில் ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்தார்.

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து விருதுநகரில் சட்டபேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், வெற்றி ஒன்றே இலக்காக எங்கள் பயணம் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் கட்டப்பஞ்சாயத்தை விரும்ப மாட்டார்கள், மாறாக வளர்ச்சியை மட்டுமே தேவையாக கொள்வார்கள். தமிழக மக்கள் இரட்டை இலை, தாமரை மற்றும் மாம்பழத்திற்கு வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் நண்பனாக மோடி விளங்குகிறார். எதிரியாக சிலர் விளங்குகின்றனர். தமிழகத்திற்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் பிரதமர் மோடி.

தமிழ்நாடு என்பது மக்களின் சொத்து. இங்கு வாரிசு அரசியலுக்கு இடமில்லை. சில குடும்பங்கள் தமிழகம் அவர்களின் சொத்து என நினைத்துக்கொண்டுள்ளனர். தமிழகம் முன்னேற வேண்டுமே தவிர, தமிழகத்தை வைத்து சில குடும்பங்கள் முன்னேறக் கூடாது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவோம்.

அதிமுக விருதுநகர் தொகுதியில் வலுவாக உள்ளது. எனவே வெற்றி உறுதி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றார்.

SCROLL FOR NEXT