தமிழகம்

வீட்டு காலிங் பெல்லைத் தட்டி வாஷிங் மெஷினை வழங்குவோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

செய்திப்பிரிவு

வீட்டு காலிங் பெல்லைத் தட்டி வாஷிங் மெஷினை வழங்குவோம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக வேட்பாளராகக் களம் காண்கிறார். இதைத் தொடர்ந்து கோபாலபுரம், செங்கப்படை, சிவரகக் கோட்டை ஆகிய பகுதிகளில் உதயகுமார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் முன்னிலையில் பேசிய அவர், ''இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதல்வர் பழனிசாமியை, முதல்வர் பதவியில் இருந்து அகற்ற முடியாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கேபிள் இணைப்புக்கான மாதாந்திரத் தொகையை இனி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து மக்களுக்கு வழங்குவார்கள்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த உதயகுமார், நேரடியாக உங்கள் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடிப்பேன். கதவைத் திறந்தால் நானும் கட்சி நிர்வாகிகளும் நிற்போம். பின்னாலேயே நமது அரசு ஊழியர்களும் வந்து நிற்பார்கள். அவர்கள் வந்து புத்தம் புதிய வாஷிங் மெஷினை வீட்டில் வைத்து விடுவார்கள்'' என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சமத்துவபுரத்தில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்தவர்களுக்குத் தேநீரைத் தயாரித்து வழங்கினார்.

SCROLL FOR NEXT