தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.கண்ணன்.
வத்திராயிருப்பு பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டம் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.கண்ணன் தலைமை வகித்தார்.
அப்போது, தேர்தலில் வாக்காளர்கள் குழப்பமின்றி தெளிவாக வாக்களிக்கும் வகையில், மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாட்டுவண்டி பேரணியைத் தொடங்கிவைத்து 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டு வண்டி ஓட்டிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்தது.