கோவை மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளில் கடந்த 8 மாதங்களாக மருந்துகள் வராததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
அரசு சித்த மருத்துவமனையில் சூரணம், லேகியம், செந்தூரம், தைலம், குடிநீர், சர்பம் என்ற ஐந்து வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த ஐந்து வகையின் கீழ் மொத்தம் 108 மருந்துகள் உள்ளன. இவற்றினை, தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளுக்கு தேவையான மூலப்பொருள்கள் தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த சித்த மூலமருந்துகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள 45 சித்த மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் இல்லாமல் அவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு சித்த மருத்துவர் கூறியதாவது: சித்த மருத்துவமனைக்கு தோல் வியாதி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை, வாதம் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை பெற அதிகமானோர் வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனத்தால் சித்த மருந்துகளுக்கு தேவையான மூலக்கூறுகள் வழங்காமல் இருப்பதால் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகத்தில் தேவையான சித்த மருந்துகளை தயாரிக்க முடிவதில்லை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மருந்துகள் தேவை குறித்த பட்டியலை அனுப்பி வைத்தோம். ஆனால், இதுவரையிலும் வரவில்லை. மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. நிலவேம்பு கசாயம் மருந்து மட்டுமே உள்ளது என்றார்.
இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வள்ளி கூறும்போது, ‘மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேவையான மருந்துகள் குறித்து டாம்ப்கால் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்போம். 3 மற்றும் 4-வது காலாண்டுகளுக்கான மருந்துகளின் தேவை குறித்து அனுப்பியுள்ளோம். அவை வந்து சேரவில்லை. விரைவில் வந்துவிடும்’ என்றார்.