வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ஓட்டேரியில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது பொதுநல மனுவில், ரயில் நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலையம் அமைக்கக் கோரி 2017-ல் அளித்த மனு மீது ரயில்வே துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்தப் பகுதியில் ரயில்வே நிறுத்தம் அமைத்தால் எத்தனை பயணிகள் வருவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், கோரிக்கை தொடர்பாக 4 வாரங்களில் புதிய மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்தக் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.