அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

திமுக இந்த தேர்வில் 'பாஸ்' ஆகப்போவதில்லை: அதிமுக 'டிஸ்டிங்ஷன்' எடுக்கும்; அமைச்சர் ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

திமுக இந்த தேர்வில் 'பாஸ்' ஆகப்போவதில்லை, நாங்கள் 'டிஸ்டிங்ஷன்' எடுப்போம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அதிமுகவுக்கு இந்த தேர்தல் கடினமான தேர்தலா?

அப்படியெல்லாம் இல்லை. எம்ஜிஆர் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்திருக்கிறார். திமுக எப்போது 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கிறது?

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக பிரிந்து ஒன்று சேர்ந்திருக்கிறது. டிடிவி தினகரன் அதிமுகவுடன் இல்லை. இவையெல்லாம் மக்கள் மனதில் இருக்குமே?

கட்சியின் பலத்தைப் பார்க்க வேண்டும். ஆயிரம் வருடம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் சொன்னார். 50-ம் வருடம் காண போகிறோம். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும் ஆட்சியும் கட்சியும் தொடர்கிறது. கட்சி எந்த காலத்திலும் உடையாது. சோதனைகளை தாங்கும். மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெறுவோம்.

அதிமுக, திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக - அமமுக என 5 முனை போட்டி நிலவுகிறது. இது அதிமுகவுக்கு பாதகமில்லையா? வாக்குகள் சிதறாதா?

அதிமுகவுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. அது மாறவில்லை.

தேமுதிக இல்லை, அதிமுகவில் இருந்து உருவாகிய அமமுக இல்லை, வாக்குகள் சிதறத்தானே செய்யும்?

எம்ஜிஆர் இருக்கும்போதே அவரை எதிர்த்து கட்சிகள் ஆரம்பித்தனர். அவர்கள் பிரகாசிக்கவில்லை. ஜெயலலிதா காலத்தில் நால்வர் அணி ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் பிரகாசிக்கவில்லை. அதுபோன்றுதான் மற்றவர்களும். திமுக இந்த தேர்வில் 'பாஸ்' ஆகப்போவதில்லை. நாங்கள் 'டிஸ்டிங்ஷன்' எடுப்போம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு திமுகவும் கருணாநிதியும்தான் காரணம் என முதல்வர் கூறியுள்ளாரே?

ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்துள்ளோம். ஜெயலலிதா எதனால் இறந்தார் என்பதை விசாரிக்கத்தான் ஆணையம் அமைத்தோம். அரசியல் ரீதியாக அவர் மரணத்துக்கு யார் காரணம் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? அந்த அரசியல் ரீதியான காரணத்தைத்தான் முதல்வர் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு, மரணம் நேர்வதற்கு திமுக காரணம் என்பதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததே?

அரசியலில் இருந்து ஜெயலலிதாவை ஒழித்துவிட வேண்டும் என திமுக நினைத்தது. ஆனால், எங்களுக்கு யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா தொடர்ந்து கூறினார். அதிமுகவுடன் அவரை இணைப்பது சாத்தியமா?

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். அதனால், நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அமமுக தனியாக இயங்குகிறது. மக்கள்தான் சிறந்த நீதிபதிகள். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, முதல்வர் கூறியதுபோல் சசிகலாவை இணைப்பது 100% சாத்தியமில்லாதது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT