எப்படியோ போகட்டும் என்று விட முடியாது. சினிமா எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அதில் வருமானம் வரும். ஆனால், இனமானம்? வருமானத்தை விட இனமானம் பெரிது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
கடலூரில் சீமான் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசியதாவது:
“நான் ஒரு கோட்பாட்டைக் கொண்டவன். வாழுகிற பூமிக்கு அரசியல் செய்யாமல் வணங்குகிற சாமிக்கு அரசியல் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. நாட்டைச் சரி செய்ய வேண்டுமானால் உங்கள் கையில் உள்ளது ஒரு வாக்கு. அதை விவசாயிக்குப் போடுங்கள். 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் ஒரு காமெடி சீனில் வடிவேலு சொல்வார், “போட்டாச்சு போட்டாச்சு” என்று. நீங்களும் அதிமுகவினர் வந்தால், 'போட்டாச்சு போட்டாச்சு' என்று சொல்லிட்டு ஒரு தடவை எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.
போட்டுப் பாரு ஓட்டை; அப்புறம் பாரு உன் நாட்டை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிப் படைப்பேன். பெருங்கனவு கொண்டிருந்த பெருந்தலைவனின் மகன் நான். 200 ஆண்டுகளுக்குப் பிறகு எம் தமிழ் இனம் எப்படி இருக்கும் எனக் கனவு கண்ட தலைவனின் மகன் நான்.
வருமானத்தை விட என் இனமானம் பெரிது என்பதால் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். உடம்பெல்லாம் அரிக்கிறது, வெயில். ஆனால், இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன்? உங்களுடன் பிறந்துவிட்டேன். நீங்கள் என்னைப் பெற்றுப் போட்டுவிட்டீர்கள். எப்படியோ போகட்டும் என்று விட முடியாது. சினிமா எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அதில் வருமானம் வரும். ஆனால், இனமானம்? வருமானத்தை விட இனமானம் பெரிது”.
இவ்வாறு சீமான் பேசினார்.