கட்சியில் வேலை செய்யாத மாவட்டத் தலைவர்களை கொலு பொம்மைகளாக அழகு பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் 3-வது கொங்கு மண்டல மாநாடு, திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
மோடி ஆட்சியின் அநியாயங் களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை என மக்கள் நினைக்கின்றனர். கட்சியில் வேலை செய்யாத மாவட்டத் தலைவர்களை கொலு பொம்மைகளாக அழகு பார்க்க முடியாது. வேலை செய்யாதவர்களை வைத்திருக்க மாட்டேன். பதவியை வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் இருப்பவர்கள் காங்கிரஸ் தொண் டர்களிடம் இருந்து தப்ப முடியாது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்கு கள் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், சசிகலா ரூ.1,000 கோடிக்கு 11 திரையரங்குகளை வாங்குகிறார் என்றால், சட்டம் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது. இதை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது நமது கடமை.
தமிழகத்தில் 20 லட்சம் இளம் பெண்கள் விதவைகளாக உள்ள னர். அதற்குக் காரணம் மது. அந்த மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த கோவன் தேசத் துரோகம் செய்த தாக குற்றம்சாட்டி, சிறையில் அடைக்கப்படுகிறார்.
வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். கடந்த ஓராண்டில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை, அடுத்த 6 மாதத் தில் அதிகப்படுத்த வேண்டும். மோடி அரசு 5 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்காது. பிரதமராக, செங்கோட்டையில் ராகுல் காந்தி கொடி ஏற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.
சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு
ஏ.சி. ரூமில் இருந்துகொண்டு யாரும் கட்சி நடத்த முடியாது. தொண்டர்கள் மத்தியில் களமிறங்க வேண்டும். அப்படி தொண்டர்களின் கஷ்டங்களை அறிந்தவர் ஈ.வி.கே.எஸ். திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை நான் கூறவில்லை. ஆனால், தேவை இல்லாமல் என்னைச் சீண்டினால் புலியாக மாறுவேன். கூட்டணியில் இருக்கிறோமோ, இல்லையோ சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு மாநாட்டில் குஷ்பு பேசினார்.