தமிழக நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த, ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ், ரூ.3 ஆயிரத்து 249 கோடிக்கான செயல்திட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ‘அம்ருத்- அடல் நகர்ப்புற புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு’ திட்டத்தின் கீழ், நகர்ப்புற மக்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சார்பில், நகர்ப்புற மக்களுக்கு 100 சதவீதம் குடிநீர், கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்த ’அம்ருத்’ திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 249 கோடிக்கான செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டப்படி, நகர்ப்புறத்தில் தினசரி ஒரு நபருக்கு 135 லிட்டர் நீர் வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 48 சதவீதம் நகர்ப்புற மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 81 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ள 27 அடல் திட்ட நகரங் களில், பல்லாவரத்தில் நாள் ஒன்றுக்கு 30 லிட்டர், ஆவடியில் 48 லிட்டர் என மிகக் குறைவாக வழங்கப் படுகிறது. சேலத்தில் மட்டுமே 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.
தலைநகரான சென்னையிலோ 58 லிட்டர் தண்ணீரே ஒருவருக்கு வழங்கப்படுகிறது. நெல்லை-101, திருப்பூர்-110, காரைக்குடி-112, கும்பகோணம்- 113, திருவண்ணா மலை-120, திருச்சி- 120 லிட்டர் தண்ணீர் ஒரு நபருக்கு வழங்கப் படுகிறது.
எனவே, நகர்ப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய் வதற்காக தற்போது சென்னைக்கு ரூ.741 கோடி, கோவை- ரூ.452 கோடி, மதுரை- ரூ.320 கோடி, வேலூர்-ரூ.250 கோடி, ராஜபாளை யம்- ரூ.245, ஈரோடு- ரூ.242 கோடி, நாகர்கோவில்- ரூ.240 கோடி, நெல்லை- ரூ.230 கோடி, தஞ்சை- ரூ.175 கோடி, ஓசூர்- ரூ.145 கோடி மற்றும் ஆம்பூருக்கு ரூ.108 கோடிக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 12 நகரங்களில், சென்னை, கோவை, வேலூர், ஈரோடு, மதுரை, தஞ்சை, திருப்பூர் ஆகிய 7 நகரங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. மற்ற நகரங்களில் அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.
தமிழக அரசின் இந்தாண்டுக் கான செயல்திட்ட அறிக்கைக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலரின் தலைமையில் விரைவில் கூட உள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
மேலும், 5 ஆண்டு அம்ருத் திட்ட காலத்தில், தமிழக அரசு குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்டவற்றுக்கு ரூ.49 ஆயிரத்து 918 கோடிக்கான திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தகவல்களை இந்திய பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பங்கு ரூ.1,372 கோடி
மாநில ஆண்டு செயல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக 11 நகரங்களில், ரூ.3 ஆயிரத்து 147 கோடி முதலீடு செய்கிறது. மீதமுள்ள தொகையில், ரூ.34 கோடி வேளாங்கண்ணி கழிவுநீர் திட்டத்துக்கும், ரூ.69 கோடி 27 மாவட்டங்களில் பூங்காக்கள், பசுமை பகுதிகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. ரூ.3 ஆயிரத்து 249 கோடியில் ரூ.ஆயிரத்து 372 கோடி மத்திய அரசின் பங்காகும்.
மத்திய அரசின் ‘அம்ருத்- அடல் நகர்ப்புற புத்தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு’ திட்டத்தின் கீழ், நகர்ப்புற மக்களின் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.