பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான 4 கோடி காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய பட்ஜெட்டின் போது, இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என நிதியமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
கடந்த வாரம் மத்திய தொழிலாளர் துறை துணை ஆணையருடன் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அறிவித்த 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இப்போராட்டத்தால் 2-வது நாளாக நேற்றும் முடங்கின.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறும்போது, இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான 4 கோடி காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள காசோலை பரிவர்த்தனை நிலையங்களில் காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல், கிளைகளிலேயே தங்கி உள்ளது. விரைவில் அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகத்தின் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் விடுத்து உள்ள செய்திக் குறிப்பில், தேசம் காக்கும் போராட்டத்துக்கு பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும், மத்திய தொழிற்சங்கங்களும், 500-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த 2 நாள் வங்கிச்சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு. மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முழு அளவில் வெற்றி பெற்று உள்ளது எனத் தெரிவித்து உள்ளனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக, பல ஏடிஎம்களில் நேற்றும் பணம் நிரப்பப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.