புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவராக இருந்த தர்ம.தங்கவேல் அக்கட்சியிலிருந்து விலகி 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அவர் தற்போது ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவை சேர்ந்த சிலர் ஆலங்குடி, கீரமங்கலத்தில் கடந்த 2 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆலங்குடி வேட்பாளர் தர்ம.தங்கவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புளிச்சங்காடு கைகாட்டிக்கு நேற்று வேனில் சென்ற முதல்வர் பழனிசாமியிடம் முறையிடுவதற்காக பனங்குளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு இருந்தனர்.
எனினும், முதல்வரின் பிரச்சார வேன் அங்கு நிற்கவில்லை. இதைக்கண்டித்தும், அதிமுக வேட்பாளரைமாற்ற வலியுறுத்தியும் கொத்தமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் பாண்டியன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இ்தன் காரணமாக அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.