காங்கயத்தில் வறட்சியால் கால்நடைகளை விற்றதை சுட்டிக்காட்டும் வகையில், கடைமடை பிஏபி பாசன விவசாயிகள் மாட்டு வண்டியை கைகளால் 2 கி.மீ. தூரம் இழுத்து வந்து நேற்று மனு தாக்கல் செய்தனர்.
பிஏபி பாசனத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் திறக்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில், காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1000 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டிக்கும் விதமாக, முதல் வேட்புமனுவாக பிஏபி கடைமடை பாசன விவசாயிகள் சார்பில் வெள்ளகோவில் ஒன்றியம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வி.கே.ராமசாமி (64) நேற்று மனு தாக்கல் செய்தார். காங்கயம் முத்தூர் பிரிவில் இருந்து மாட்டு வண்டியில் வேட்பாளரை அமர வைத்து, வட்டாட்சியர் அலுவலகம் வரை 2 கி.மீ. தூரத்துக்கு கையால் இழுத்து வந்தனர். தாரை த ப்பட்டை இசைத்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிஏபி தண்ணீர் கிடைக்காததை சுட்டிக்காட்டும் வகையில், காலி மண் குடத்தை சுமந்தபடி விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.
காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெங்கராஜனிடம் வி.கே.ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
தற்போது வரை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருப்ப மனுவை வாங்கி, அதை பூர்த்தி செய்யும் பணியில் உள்ளனர். மனு தாக்கல் அலுவலகமான வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் விவரங்களை, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சேகரித்து வருகின்றனர். 19-ம் தேதி வரை விவசாயிகள் பலர் அடுத்தடுத்து மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.