மத்திய அரசு சார்பில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கைரேகை பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருப்பவரும் வேறு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் அருகே பீர்க்கன்காரணையில் கடை எண் கே.டி.183 கடையில் பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் நேற்று பொருட்களை வாங்க சென்றார். அவருக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பொருட்களை வழங்க மறுத்துள்ளார். இது தொடர்பாக ஏழுமலை தாம்பரம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஏழுமலை கூறும்போது, "எங்கள் கார்டு முடிச்சூர் பகுதியில் உள்ளது. தற்போது பீர்க்கன்காரணையில் வசித்து வருகிறோம். 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்கீழ் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், எங்கள் வீட்டின் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க சென்றோம். அங்கு பொருள் வழங்க மறுத்துவிட்டனர். நாங்கள் விளக்கம் கூறியும், அவர்கள் பொருட்களை தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு சர்வர் இயங்கவில்லை, இயந்திரம் கோளாறு எனக் கூறி பொருட்களை வழங்க மறுத்துவிட்டனர். இதனால் நாங்கள் அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம்" என்றார்.
இதுகுறித்து, தாம்பரம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி பத்மா சங்கரிடம் கேட்டபோது, "புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் விசாரணை மேற்கொண்டு, சம்பவம் உண்மையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.