திமுக வெளியிட்டுள்ள 504 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையை கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுசென்று வெற்றிக்கு பாடுபட வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று செங்கல்பட்டு, ஆலந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தனித்தனியே நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, கொங்குநாடு மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு ஆலந்தூர் எம்எல்ஏவும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு வேட்பாளர் வரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர்.பாலு பேசியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளை நாம் இழந்துள்ளோம். அதாவது ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளோம். இதனால் திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
கடந்த இரு ஆண்டுகளாக செங்கை மாவட்ட திமுகவினர் கடுமையாக உழைக்கின்றனர். கரோனா காலத்தில் மக்களுக்கு தேவையானதை கொடுத்து உதவி செய்திருக்கின்றனர். இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களிடம் படித்துக் காட்ட வேண்டும். அவ்வாறு தேர்தல் அறிக்கையை நீங்கள் கொண்டு செல்லும்போதுதான் வெற்றி எளிதாக அமையும்.
முதல்கட்டமாக கட்சியினர் அனைவரும் 504 பக்க தேர்தல் அறிக்கையை அவசியம் படிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த அறிக்கையை பெண்களிடம் கொண்டு சேர்க்க கட்சியினர் அனைவரும் உழைக்க வேண்டும். திமுக இயக்கம் இந்துக்களின் எதிரி இயக்கமல்ல என்பதை நிரூபிக்க, ரூ.1,000 கோடியில் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்துள்ளதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.