புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய எழிலரசிநேற்று காரைக்கால் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர், புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவில் கையெழுத்திட வந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய தொழிலதிபர் ராமு(எ) ராதாகிருஷ்ணனின் 2-வது மனைவி எழிலரசி. ராமுவின் முதல் மனைவி வினோதா, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் ஆகியோர் கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரான எழிலரசி கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்த அவர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, பணம் கேட்டு தொழிலதிபர்களை மிரட்டியதாகவும், ராமுவின் மகன்களை மிரட்டி சொத்துக்களை வாங்க கையெழுத்து கேட்டதாகவும் சில வழக்குகள் எழிலரசி மீது பதிவு செய்யப்பட்டன.
அவர் மீது நீதிமன்றம் 4 பிடிவாரண்ட்கள் பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவரை 6 மாதங் களாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் புதுச்சேரியில் பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், நாகை அருகே நாகூர் பிரதான சாலையில் எழிலரசி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்த நிலையில், காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான திருமலைராயன்பட்டினம் போலீஸார் அங்கு சென்று எழிலரசியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருமலை ராயன்பட்டினத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
வேட்பு மனுத்தாக்கல்
இதனிடையே நிரவி-திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட எழிலரசி சார்பில் அவரது சகோதரர் முருகவேல் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் கையெழுத்திட எழிலரசி வந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.