தமிழகம்

புதுவை, காரைக்காலில் பாஜக 9, அதிமுக 5 இடங்களில் போட்டி: தொகுதி வாரியாக வேட்பாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதிமுக 5 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பாஜகவில் 9 வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளனர். அதிமுகவில் நடப்பு எம்எல்ஏக்கள் நால்வருக்கும், கூடுதலாக மேற்கு மாநிலச்செயலருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

அதேபோல் பாஜகவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தலைவர் சாமிநாதன், ஜான்குமார், அவரது மகன் ஆகியோருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து அதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீட்டில் சிக்கல் நிலவி வந்தது. அது முடிவுக்கு வந்து அதிமுகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு 5 இடங்கள்

இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

உப்பளம் - கிழக்கு மாநில செயலர் அன்பழகன் எம்எல்ஏ, உருளையன்பேட்டை- மேற்கு மாநில செயலர் ஓம்சக்தி சேகர், முத்தியால்பேட்டை- கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலர் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, முதலியார்பேட்டை- பாஸ்கர் எம்எல்ஏ, காரைக்கால் தெற்கு- அசனா எம்எல்ஏ ஆகிய ஐவரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முடிவுக்கு வந்த நெல்லித்தோப்பு சிக்கல்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்ட நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட பாஜகவும், அதிமுகவும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். பாஜக தரப்பில் ஜான்குமாரின் மகன் ரிச்சர்ட்ஸ், அதிமுகதரப்பில் ஏற்கெனவே அங்கு போட்டியிட்டிருந்த ஓம்சக்தி சேகரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வழக்கமாக ஓம்சக்தி சேகர் போட்டியிட்ட அத்தொகுதியிலிருந்து மாற்றிஉருளையன்பேட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வென்ற நான்கு எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக 9 இடங்களில் போட்டி

பாஜக புதுச்சேரியில் 9 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா அறிவித்தார். அதன் விவரம்:

மண்ணாடிப்பட்டு- முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், லாஸ்பேட்டை- மாநிலத்தலைவர் சாமிநாதன், காமராஜ் நகர்- முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார். மணவெளி- ஏம்பலம் செல்வம், ஊசுடு- சாய் சரவணகுமார், காலாப்பட்டு- முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், நெல்லித்தோப்பு - ஜான்குமார் மகன் விவிலியன் ரிச்சர்ட்ஸ், திருநள்ளாறு - ராஜசேகரன், நிரவி திருபட்டினம் - முன்னாள் சபாநாயகர் விஎம்சி சிவகுமார் மகன் மனோகரன்.

ஜான்குமார் மகனுக்கும் வாய்ப்பு

இதில் காங்கிரஸிலில் இருந்துபாஜகவுக்கு வந்த நமச்சிவாயம்,ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸிலிருந்து வந்த கல்யாணசுந்தரமும் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளர் பெயர், போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என 3 மொழிகளில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரங்கசாமி ஏனாமில் இன்று மனுத் தாக்கல்

தட்டாஞ்சாவடி தொகுதியில் ஏற்கெனவே ரங்கசாமி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு ஏனாமிலும் இன்று மனுத் தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் ஏனாம் கிளம்பிச் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT