தமிழகம்

செய்யாறு தொகுதியில் போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ மோகனுக்கு ரூ.3.91 கோடி சொத்து

செய்திப்பிரிவு

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி கே.மோகன் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.3.91 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “தூசி கே.மோகன் தன்னிடம் ரூ.2 லட்சமும், மனைவி பார்வதி மற்றும் மகள் மினுவிடம் தலா ரூ.50 ஆயிரம் கையிருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தனது பெயரில் இரண்டு வங்கிகளில் ரூ.40 ஆயிரம், ரூ.4,96,515 இருப்பு வைத் துள்ளதாகவும், மனைவி பார்வதி பெயரில் இரண்டு வங்கிகளில் ரூ.12,77,723, ரூ.8,92,405 இருப்பு வைத்துள்ளதாகவும், மகள் மினு பெயரில் ஒரு வங்கியில் ரூ.4,500 இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது பெயரில் ரூ.23 லட்சம் மற்றும் ரூ.17 லட்சம் மதிப்பில் இரண்டு சொகுசு கார்கள், மகள் பெயரில் ரூ.6 லட்சம் மதிப்பில் ஒரு கார் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மனைவியிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் 50 பவுன் நகை, மகளிடம் ரூ.3 லட்சம் மதிப்பில் 10 பவுன் நகை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.47,36,515, மனைவி பெயரில் 37,20,128 மற்றும் மகள் பெயரில் ரூ.9,54,500 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அசையா சொத் தாக தனது பெயரில் ரூ.2.69 கோடி மதிப்பில் நிலம், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.23.50 லட்சம் மதிப்பில் வீட்டு மனைகள் இருப்பதாகவும், மகள் பெயரில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் விவசாய நிலம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னையில் உள்ள வங்கியில் தனது பெயரில் கார் கடன் ரூ.9,34,988 மற்றும் மனைவி பெயரில் ரூ.36,54,520 கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன் மீது வழக்குகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தூசி மோகன், கடந்த 2019-20-ம் நிதியாண்டில் ரூ.8,42,620 மற்றும் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.3,90,126 வருவாய் ஈட்டி உள்ளதாக வருமான வரித்துறையிடம் கணக்கு காண்பித்துள்ளார். தூசிகே.மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் அசையும் சொத்தாக ரூ.94,11,143 மற்றும் அசையா சொத்தாக ரூ.2,97,00,000 என மொத்தம் ரூ.3,91,11,143 சொத்து உள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT