திருப்பத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுமதி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிசார்பில் திருப்பத்தூர் நரியநேரி பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான சுமதி (33) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தனாகர்க்கிடம் தனது வேட்பு மனுவை சுமதி நேற்று தாக்கல் செய்தார்.
இதற்காக, நரியநேரி கிராமத்தில் இருந்து வேட்பாளர் சுமதி மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார். சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பிறகு, வேட்பாளர் சுமதி தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று மனு தாக்கல் செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில் சுமதியும், ஜோலார்பேட்டை தொகுதியில் சுயேட்சைவேட்பாளர் மனிதன் என்பவரும், ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதன் உட்பட 2 பேர் என மொத்தம் 4 பேர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.