தமிழகம்

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் வேட்பாளருக்கு அபராதம்: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

ரெ.ஜாய்சன்

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5-க்குள் தான் இருக்கிறது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 235 பேருக்கு ரூ.50,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 11,161 பேருக்கு ரூ.23,89,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா பாதிப்பு மிகவும் குறைவான அளவில் தான் இருக்கிறது. மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகள் வழக்கம் போல் தினமும் 800 முதல் 900 வரை செய்யப்படுகிறது. ஆனால், பாசிட்டிவ் விகிதம் 0.03 என்ற அளவில் தான் இருக்கிறது.

இருப்பினும் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். மாவட்டத்தில் 20 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 30-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பணியாற்றவுள்ள 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6000 பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவருக்கும் வாக்குப்பதிவுக்கு முன்னால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்கள் போன்ற விழாக்களில் சோதனை நடத்தி முகக்கவசம் அணியமால் இருந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் மண்டப உரிமையாளருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும். அதுபோல பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் தனி நபருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்களில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறும் போதே இது குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்களில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் வேட்பாளர் அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு தலைமை செயலர் நேற்று காணொலி மூலம் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்களை முழுமையாக செயல்படுத்தவும், கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தினார். எனவே, பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, நமது மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

SCROLL FOR NEXT