தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்க உள்ள சுயேட்சையான தனது ஆதரவாளரின் வேட்பு மனுவை பூஜை செய்து ஆசிர்வாதம் தந்து ஆதரவை வெளிப்படையாக ரங்கசாமி தெரிவித்துள்ளதையடுத்து பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், என்னென்ன தொகுதிகள் என்பதை அறிவிக்கவில்லை. வேட்பாளரையும் கட்சித்தலைவர் ரங்கசாமி அறிவிக்காமல் அவர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர். அதேபோல், பாஜக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. இதனால் குழப்பமே நீடிக்கிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் மதச்சார்பற்ற அணியில் திமுக போட்டியிடுகிறது. எதிர் அணியில் பாஜக தரப்பிலும், அதிமுக தரப்பிலும் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் யார் கூட்டணி வேட்பாளர் என்பது இறுதியாகவில்லை.
இச்சூழலில், என்.ஆர்.காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அண்மையில் பலரின் எதிர்ப்பையும் தாண்டி என்.ஆர்.காங்கிரஸில் கட்சியில் இணைந்த செந்திலும் காலாப்பட்டு தொகுதியை கேட்டிருந்ததால், சுயேட்சையாக மனுதாக்கல் செய்ய முடிவு எடுத்தார்.
அப்பா பைத்தியம் சாமி கோயிலில் செந்திலின் வேட்பு மனுவை வைத்து இன்று (மார்ச் 16) பூஜை செய்து, பிரசாதத்துடன் ரங்கசாமி தந்தார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து வேட்பு மனுவை பெற்றுக்கொண்டு சென்றார். அவர் நாளை மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கும் சுயேட்சைக்கு ரங்கசாமியே பகிரங்க ஆதரவு தருவதை பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.