அதிமுக ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தில் தடம் பதிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
"பாஜக வகுப்புவாதக் கட்சி மட்டுமல்ல ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சி. சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி. பாசிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி. அதனுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்தால் நீங்கள் நன்கு அறிவீர்கள். எந்த ஒரு மாநிலத்திலும் தங்களது கட்சியைத் தவிர பிற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடாது என பாஜக கருதுகிறது. கடந்த காலங்களில் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசுகள், மாநில ஆட்சிகளைக் கலைத்திருக்கின்றன. ஆனால் தற்போது சில மாநிலங்களில் எம்எல்ஏக்களை ஆடு, மாடுகளைப் போல் விலைக்கு வாங்கி அம்மாநில ஆட்சிகளைக் கலைத்து வருகின்றனர்.
சில வாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தனர். இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சில அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, ரிசர்வ் பேங்க் உள்ளிட்ட அமைப்புகளை பாஜக அரசு தனக்குக் கீழ் கொண்டுவந்து அந்த அமைப்புகளை நிலைகுலைய வைத்துள்ளது. எந்த அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய ஆபத்தாகும். எனவேதான் அந்தக் கட்சி தமிழகத்தில் தடம் பதிக்கக் கூடாது என நாங்கள் கூறி வருகிறோம். பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதிமுக ஆட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி அதன் தலை மீது ஏறிச் சவாரி செய்து, தமிழகத்தில் தடம் பதிக்க முயல்கிறார்கள். இது உள்கட்சிப் பிரச்சினை அல்ல.
வகுப்புவாத சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியினரும் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆகவே ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பக்கத்தில் இருந்து திமுக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இந்தத் தேர்தலில் தரப்படவில்லை என்பது உண்மைதான். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதாவை பாஜக கொண்டுவந்தால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருகரம் கூப்பி வரவேற்கும்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.