தமிழகம்

குழந்தைகள் பாதுகாப்புக்கு தனித்துறை; குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தனி அந்தஸ்து: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

செய்திப்பிரிவு

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் அரசியல் கட்சிகள் சமீபத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இன்று வெளியிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள சிறப்பம்சங்கள்:

• பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்திலிருந்து வரும் பெண்களுக்கு உயர்கல்வி பயில அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அரசு, தனியார், வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் விதமாக, ‘விசாகா கமிட்டி’ அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை மற்றும் அனைத்து விதமான வன்கொடுமைக் குற்றங்களை விசாரிக்க, அனைத்து மாவட்டங்களிலும் விரைவு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து வழக்குகளை 6 மாதத்திற்குள்ளாக விசாரித்து நீதி வழங்க ஆவன செய்யப்படும். வழக்கு நடைபெறும் காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, பயணப்படி மற்றும் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும்.

• முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை ரூ.3,000/- உயர்த்தி வழங்கப்படும்.

• பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு, மத்திய அரசு வசூலிக்கும் பத்திரப் பதிவுக் கட்டணம், 7 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கவும், மாநில அரசின் பத்திரப் பதிவுக் கட்டணம், 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

• சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

• அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையிலும், பெண்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பிடங்களிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

• பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்புப் பயிற்சியை ஒரு கட்டாயப் பாடமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• திமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

• குழந்தைகள் மீது தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துக் கொண்டு வருவதால், குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று தனித் துறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தனி அந்தஸ்து மற்றும் முழுக்கட்டமைப்புகள் கொண்ட அமைப்பாக இயங்க வழிவகை செய்யப்படும்.

• அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு என்று சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் பிற வன்முறைகளைத் தடுப்பதற்கு, குழந்தை உரிமைக் கல்வி, பாலினச் சமத்துவம், பாலின நீதி மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி போன்றவை அனைத்துப் பள்ளிகளிலும், இருபாலினக் குழந்தைகளுக்கும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்.

• அனைத்துப் பள்ளிகளிலும் முழு நேர மன நல ஆலோசகர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைப் பன்னிரண்டாம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• அரசு உயர் கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில், அரசுப் பள்ளியில் படித்து வருபவர்களுக்கு, 50 விழுக்காடு ஒதுக்கப்பட வழிவகை செய்யப்படும்.

• போக்சோ சட்ட அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கு என்று மாவட்ட அளவில் தனி அமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ளது. இதில் குழந்தை உரிமை மற்றும் குழந்தைப் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வலியுறுத்தப்படும்.

மேலும், குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் ஏதாவது குழந்தை மீது வன்முறை நடந்தால் மட்டுமே பார்க்கிற அமைப்பாக இல்லாமல், தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT