தமிழகம்

கட்சிகளுக்குப் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரும் வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

தங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் கோருவது தொடர்பாக ஐஜேகே, சரத்குமாரின் சமக, புதிய தமிழகம் கட்சி ஆகியவை இன்றே மீண்டும் புதிய விண்ணப்பத்தை அளிக்க வேண்டுமென்றும், அவற்றைப் பரிசீலித்து நாளைக்குள் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, பொதுச் சின்னம் கோரிய விண்ணப்பத்தில் அத்தாட்சி பெற்ற நபர் என யாரையும் குறிப்பிடவில்லை எனவும், பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கான தேதி முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஐஜேகே தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகி, தேர்தல் ஆணைய விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

“இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் குறித்த விவரங்களுடன் வேட்புமனுத் தாக்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, உரிய விண்ணப்பம் அளித்தும் மார்ச் 11-ம் தேதி மனு நிராகரிக்கப்பட்டது. எங்கள் மனுவை முறையாகப் பரிசீலித்து மார்ச் 19-ம் தேதிக்குள் பொதுச் சின்னம் ஒதுக்கச் சட்டத்தில் இடமுள்ளது.

வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ ரிக்‌ஷாவை ஐஜேகேவின் பொதுச் சின்னமாக ஒதுக்க வேண்டும் என்றும், அல்லது வேறொரு பொதுச் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் வாதிட்டனர்.

இதேபோல தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

மூன்று வழக்குகளிலும் பொதுவான உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஜனநாயகத் திருவிழாவில் வாக்குரிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோலத் தேர்தலில் போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டியதும் முக்கியம் எனத் தெரிவித்தது.

விண்ணப்பத்தில் இருந்த குறைபாடுகளைத் திருத்தம் செய்து சமர்ப்பிக்க விதிகள் இல்லாததால், தேர்தல் ஆணையம் எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய விண்ணப்பத்தையும் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டதால், அவர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

அதன்படி ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை பொதுச் சின்னம் கோரி இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவற்றைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து நாளை மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு மூன்று வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT