தமிழகம்

9, 10, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை? - கல்வித்துறை விளக்கம்

செய்திப்பிரிவு

9, 10, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் அதிகரிப்பு

9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை வழங்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருவதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘9, 10, 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை.

நம்ப வேண்டாம்

இதுதொடர்பாக பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர்நம்பவேண்டாம். தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில்சட்டப்பேரவை தேர்தல் ஏப்.6-ம்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ள பள்ளிகளில் மட்டும்தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுமுறை தரப் படும்.

மேலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் தேர்தல் பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கற்பித்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. குறைந்த வருகைப்பதிவு கொண்ட பள்ளிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

SCROLL FOR NEXT