ஐந்தே ஆண்டுகளில் மாநிலத்தின் கடன்களை அடைக்க எங்களிடம் திட்டம் உள்ளது என்று மக்கள் நீதி மய்ய துணைத் தலைவரும் கலாமின் உதவியாளருமான பொன்ராஜ் தெரிவித்தார்.
சிங்கம்புணரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மநீம மக்களின் பார்வை மக்கள்நீதி மய்யம் பக்கம் திரும்பியுள்ளதால் 120 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம்.விஜயகாந்த் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், எங்கள் கூட்டணிக்கு வந்திருப்பார். எங்களின் தேர்தல் அறிக்கையை திமுக, அதிமுக காப்பி அடித்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இரு கட்சிகளும் மத்திய அரசுகளுடன் பங்கு வைத்துக்கொண்டு மாநிலசுயாட்சியை விட்டுக் கொடுத்துவிட்டன. தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்ற மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
உண்மையில் கருணாநிதியிடம் இருந்த திறமைகூட ஸ்டாலினிடம் இல்லை. ஐந்தே ஆண்டுகளில் மாநிலத்தின் கடன்களை அடைக்க எங்களிடம் திட்டம் உள்ளது. அதிமுக, திமுகவுக்கு தலா 20 சதவீத வாக்குகளே உள்ளன. பொதுமக்கள் நினைத்தால் நல்ல மாற்றத்தை உருவாக்கலாம்.
சுத்தமான குடிநீருக்கே ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ரூ.82ஆயிரம் செலவு செய்கிறோம். கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது மக்களின் வரிப்பணம். ரூ.82 ஆயிரத்துக்கும் குறைவாகக் கொடுத்தால் வாங்காதீர்கள். மீதியைக் கேட்டு வாங்குங்கள் என்றார்.