தமிழகம்

நலத் திட்டங்களை முடக்க மத்திய அரசு முயற்சி: வாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் நலத் திட்டங்களை முடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, முன்பு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தும், சில திட்டங்களை முடக்கவும் முயன்று வருகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்திலாவது மக்கள் நலத்திட்டங்களை விரிவுபடுத்தும் வகையிலும், பல்வேறு புதிய நலத்திட்டங்களை நடைமுறைபடுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும்.

மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கொள்கையில் நிலைத்த தன்மையை கொண்டுவரவும், சேவை வரி மசோதாவில் எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மசோதாவை திருத்தித் தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர்ப் பங்கீட்டு குழு அமைப்பது, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு நல்ல தீர்வு, தமிழக மீனவர் பிரச்சினையில் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே பேச்சு வார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பெய்த பருவ மழையால் பெருத்த சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒதுக்கிய ரூ.940 கோடி போதுமானதல்ல. மத்திய அரசின் குழு தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து பார்த்து ஆய்வு செய்து, உடனடியாக வெள்ள நிவாரண நிதியை வழங்கிட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT