தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது. அதற்காக தேர்தல் செலவின பார்வையாளர்களை முன்கூட்டிய தமிழக தொகுதிகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக் காலமாக ஓட்டுக்குஅரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் பழக்கம் அதிகரித்திருப்பது தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக உள்ளது. அதன் உச்சமாகவே, ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டுநடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள், 2017-ம்ஆண்டு நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. ஓட்டுக்கு பணம் கொடுப்பது பிற மாநிலங்களில் இருந்தாலும் தமிழகம் போன்று மோசமாக இல்லை எனகருதும் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் ரத்துநிகழ்வுகளை பெரிய அவமானமாக நினைக்கிறது.
இது தொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இந்திய தேர்தல்ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த முறைதமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில் மிகவும்உறுதியாக உள்ளது. ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவிடலாம். அது தொடர்பான கணக்குவிவரங்களை செலவின பார்வையாளர்களிடம் தாக்கல் செய்யவேண்டும். இறுதி வேட்பாளர்பட்டியல் அறிவித்த பிறகே, ஒருவேட்பாளர் செய்யும் செலவுகள்,தேர்தல் செலவு கணக்கில் வரும்என்பதால், வழக்கமாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபிறகே தேர்தல் செலவின பார்வையாளர்கள் தொகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
ஆனால் இந்தமுறை, வேட்புமனு தாக்கலுக்கு முன்பாகவே தேர்தல் செலவின பார்வையாளர்கள் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரும் 21-ம் தேதி ஒருபிரிவு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகம் வர இருந்தனர். அவர்களை 17-ம் தேதியேதொகுதிகளுக்கு செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.
மேலும் இந்த பார்வையாளர்கள் தேர்தல் மற்றும் மறு தேர்தல் முடியும் வரை தொகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாது, செலவினப் பார்வையாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று சென்னை மாவட்டத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல்வெளியிடுவதற்கு முன்பாகவே 96 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளுக்கும் தலா 6 படைகள் நேற்றுஅனுப்பி வைக்கப்பட்டன. எனவேஇந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது கடினமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றனர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெண்கள் ஆரத்தி எடுத்த தட்டில் பணத்தை போடும் காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடரபாக தேர்தல் பறக்கும் படையினர், செலவின பார்வையாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.