தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் புனரமைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தாம்பரம் தொகுதி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவ.இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “தரமான குடிநீர் வழங்கப்படும். குப்பை மேலாண்மை, பாதாள சாக்கடைத் திட்டங்கள் கொண்டு வரப்படும். தாம்பரம் - மேடவாக்கம், தாம்பரம் - முடிச்சூர் சாலைகள் விரிவாக்கப்படும். கேம்ப் ரோடு சிக்னல் அருகில் பாதசாரிகளுக்கு நடை மேம்பாலம் அமைக்கப்படும். தாம்பரம் பெருநகராட்சி சுற்றுவட்டார பகுதிகளுடன் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிட்லபாக்கம், செம்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், பெருங்களத்தூர், கடப்பேரி ஆகிய ஏரிகள் சீரமைத்து பாதுகாக்கப்படும்.
தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் - ஊழலற்ற அரசு நிர்வாகமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.