ஆந்திர மாநிலத்தின் பிச்சாட்டூர் ஏரியில் உபரிநீர் திறப்பால் ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆந்திர மாநிலப் பகுதியான பீச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரி நீர் கடந்த 5 நாட்களுக்கு மேலாக ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆரணி ஆற்றுக்கரையோரத்திலும் வசிக் கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பலர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருவர் மாயம்
இந்நிலையில் பெரிய பாளையம் அருகே உள்ள ராள்ளபாடியைச் சேர்ந்த மணிகண்டன்(20), ஜெகன்(21) ஆகிய இருவரும் நேற்று காலை ராள்ளபாடி பகுதியில் ஆரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அக்கம் பக்கத் தினர் அவர்களைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த பெரியபாளையம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கொசஸ்தலை, கூவம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி, கடந்த சில நாட்களில் ஒரு முதியவர், ஒரு தனியார் கல்லூரி மாணவர், இரு இளைஞர்கள் என, 4 பேர் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.