புதுச்சேரி வில்லியனூர் தொகுதியிலிருந்து மாறி மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம். இதையொட்டி, அவரது தொகுதியான வில்லியனூரில் இருந்து ஆதரவாளர்கள் முன்பு தெரிவித்து விடைபெறுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.
புதுச்சேரியில் வில்லியனூர் தொகுதியில் வென்று அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம், தற்போது மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்திருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது. அதை அவரது ஆதரவாளர்களிடம் இன்று (மார்ச் 15) தெரிவித்தார். அப்போது, வில்லியனூரிலிருந்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதை தெரிவித்தவுடன், கண்ணீர் விட்டு நமச்சிவாயம் அழுதார். அவரை அவரது ஆதரவாளர்கள் தேற்றினர்.
மாநிலத்தலைவரும் போட்டி
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தாலும், நியமன எம்எல்ஏவானார். இம்முறை அவர் லாஸ்பேட்டை தொகுதியில் இருந்து போட்டியிட போவதில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மாநிலத்தலைவரான சாமிநாதன் தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அவரும் பாஜக தரப்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டையில் போட்டியிடுகிறார் என்பதையும் கட்சி வட்டாரங்கள் உறுதி செய்தனர.
பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் விவரங்களும் டெல்லியிலிருந்து இன்றோ, நாளையோ வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.