தமிழ்நாட்டிலேயே ஒரு குடிசை கூட இல்லாத தொகுதியாக ராயபுரத்தை மாற்றியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார். ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளேன். 1991-க்கு முன்பு ராயபுரம் பகுதிக்கு மக்கள் வரவே அச்சப்படுவார்கள். மழை வந்தால் இடுப்பளவு தண்ணீர் நிற்கும். மின்சாரம் அடிக்கடி போய்விடும். குடிசைகள் நிறைய இருக்கும், அவை தீப்பிடித்துவிடும். சாலை வசதி இருக்காது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை இருந்தது. அதை ஜெயலலிதா உதவியுடன் மாற்றினோம்.
தமிழ்நாட்டிலேயே ஒரு குடிசை கூட இல்லாத தொகுதி என்று சொன்னால் அது ராயபுரம் தொகுதி என்ற வகையில் மாற்றியுள்ளேன். மின்துறை அமைச்சராக இருந்தபோது மின் வழித்தடம், துணைமின் நிலையங்கள் ஆகியவற்றை அமைத்ததால், வெள்ளம் வந்த சூழலிலும் தமிழ்நாட்டிலேயே ராயபுரம் தொகுதியில் மின்சாரம் தடையின்றிக் கிடைத்தது.
சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை 100 சதவீத அளவுக்குப் பயன்படுத்திய பெருமை எனக்குண்டு. சத்துணவுக் கூடம், சமுதாயக் கூடம், பள்ளிக் கட்டிடங்கள், ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்திருக்கிறேன். ராயபுரத்தைக் குட்டித் தமிழ்நாடு என்றே சொல்லலாம். இங்கு நிலவிய போக்குவரத்து நெரிசல்களையும் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
கரோனா காலத்தில் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் களப்பணி செய்திருக்கிறேன். ராயபுரம் தொகுதியில் பல்வேறு காய்ச்சல் முகாம்களை நடத்தி, கரோனா தாக்கம் இல்லாத தொகுதியாக மாற்றியுள்ளேன். சொந்த செலவில், முட்டை, வாழைப்பழம், சத்துணவு உள்ளிட்ட பொருட்களை இரண்டு மாதங்களுக்கு இலவசமாகச் சொந்த செலவில் வழங்கினேன் அதேபோல ரூ.10 லட்சம் சொந்த செலவில் ஆர்சனிக் மாத்திரைகளையும் வழங்கியுள்ளேன்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.