சீமான்: கோப்புப்படம் 
தமிழகம்

திருவொற்றியூரில் நின்று சண்டை செய்ய வந்திருக்கிறேன்; கமல் பறப்பதற்கு பிக் பாஸில் வந்த பணமே போதும்: சீமான் பேட்டி

செய்திப்பிரிவு

மக்களிடம் ஓட்டுகளைக் கேட்பதை விட என் நாட்டைக் காப்பதுதான் எனக்குப் பெரிது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (மார்ச் 15) அத்தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நாங்கள் சிறந்த தொடக்கத்தை முன்வைப்போம். நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். நாங்கள் ஆகச்சிறந்த தொடக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். மே 2-ம் தேதி பார்ப்பீர்கள்" என்றார்.

பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்?

இங்கிருக்கும் பிரச்சினைகள்தான் காரணம். அனல்மின் நிலையம், அதானி துறைமுகம் ஆகியவை பழவேற்காடு, எண்ணூர் ஆகிய இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. இங்கிருக்கும் பிரச்சினைகள், தமிழ்நாடு தலைநகர் சென்னையை மறந்துவிட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது.

மழைநீர் வடிந்து வெள்ளநீர் கடலில் சேரும் முகத்துவாரத்தை அடைத்துள்ளனர். சுவர்கட்டி எழுப்பிவிட்டனர். கடல், ஆறு, கரை என எல்லாவற்றையும் சேர்த்து 6,111 ஏக்கரை அவருக்கு (அதானி) எடுத்துக் கொடுத்துள்ளனர். மீதி என்ன இருக்கும்? நாங்கள் எங்கள் நாட்டை மறந்துவிட வேண்டியதுதான். முதலாளியின் வாழ்வுக்காக என் தாய் நிலத்தை என்னால் இழக்க முடியாது. மக்களிடம் ஓட்டுகளைக் கேட்பதை விட என் நாட்டைக் காப்பதுதான் எனக்குப் பெரிது. அதனால்தான் இங்கு நின்று சண்டை செய்ய வந்திருக்கிறேன்.

அதிமுக தேர்தல் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அதை நான் எப்படியும் பார்க்கவில்லை.

தொகுதிக்கான நிலவளத் திட்டங்கள் என்னென்ன?

நிலத்தையே காப்பாற்ற வந்திருக்கிறேன். பிறகு என்ன நிலவளத் திட்டங்கள்? நாளை வெளியிடுகிறேன்.

கமல் காஞ்சிபுரம், கோவை போன்ற மாவட்டங்களுக்கு விமானத்தில் சென்றுள்ளாரே? நீங்கள் பணம் இல்லை என்கிறீர்கள்?

என்னிடம் உண்மையிலேயே பணமில்லைதானே. அவர் வெகுநாட்கள் நடித்திருக்கிறார். அவர் பறப்பதற்கு பிக் பாஸில் வந்த பணமே போதுமே. சொந்தமாக கூட விமானம் வாங்கிப் பறக்கலாம். அவர் வசதிக்கு அவர் செய்கிறார்.

வேட்பாளர் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என விதி இருக்கிறதே?

அதைத் தேர்தல் ஆணையம்தான் கேட்க வேண்டும். நான் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT