நான் ஒன்றிரண்டு யோசனைகளைக் கேட்க ரஜினியை அணுகலாம் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு அணி களம் காண்கிறது. இந்தக் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல். இதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். 2021-ம் ஆண்டு தேர்தல் களம், எதிர்க்கட்சிகள் மீது சாடல், மநீம கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு முறை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார் கமல்.
அந்தப் பேட்டியில் "அரசியல் களத்தில் ரஜினியை மிஸ் செய்கிறீர்களா? அவர் இல்லாததால் சுவாரசியம் இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:
"நானும் ரஜினியும் என்றுமே மோதிக்கொண்டதில்லை. நாங்கள் எங்களுக்கான வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்து, கிடைத்த தருணங்களில் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அப்படித்தான் அரசியலிலும் இருந்திருக்கும். தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாமல் போவது எல்லாம் தனிப்பட்ட, அவரது முடிவு.
மறுக்க முடியாத ஒரு காரணத்துக்காகத்தான் அவர் அரசியலில் நுழைய வேண்டாம் என்று முடிவெடுத்தார். அது அவரது தனிப்பட்ட ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. எனவே, அவர் எடுத்த முடிவில் அவர் நிற்கிறார். அது சரியானதே. நான் ஒன்றிரண்டு யோசனைகளைக் கேட்க அவரை அணுகலாம்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: ரம்யா கண்ணன், உதவ் நாயக்; தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா