தமிழகம்

10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து மேலும் இரு வழக்குகள்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரு வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.

தமிழக கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம். பிரபு என்பவரும், பரவர் என்ற சமுதாயத்தின் சார்பில் என்.வளன்சந்திரா என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

டாக்டர் பிரபு தாக்கல் செய்திருந்த மனுவில், “ஏற்கெனவே பிரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்விதத் தகவலையும் வழங்காத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்குவதும் விதிகளுக்கு முரணானது” எனத் தெரிவித்துள்ளார்.

மீனவ கிராமங்களில் கோச்சிங் வகுப்புகளை எடுக்கும் வளன்சந்திரா தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசு மற்றும் நீதித்துறையில் போதிய இடங்களை வன்னியர்கள் பெற்றுள்ளனர். சமூகத்தில் அவர்களின் நிலை, கல்வித் தகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், வன்னியர்களின் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகளுடன் பட்டியலிட அறிவுறுத்தி இரு வழக்குகளையும் ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT