அமைச்சர் சி.வி.சண்முகம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
தமிழகம்

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் வேட்புமனுத் தாக்கல்

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோன்று, திமுக வேட்பாளர் லட்சுமணனும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (மார்ச் 15) கோட்டாட்சியர் ஹரிதாஸிடம் வேட்புமனுத் தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருடன் நகரச் செயலாளர் பாஸ்கரன் உடனிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் பிற்பகல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதியில் தற்போது 3-வது முறையாக சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரான லட்சுமணன், கோட்டாட்சியர் ஹரிதாஸிடம் வேட்புமனுத் தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார். நாளை மறுநாள் அவர் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

திமுக வேட்பாளர் லட்சுமணன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

லட்சுமணன் முதல் முறையாகத் தேர்தல் மூலம் மக்களைச் சந்திக்கிறார் என்பதும், இவர் முன்னாள் ராஜ்ய சபா எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

வேட்புமனுத் தாக்கலின்போது முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT