பாமர மக்கள் கூட பாரதப் பிரதமரைக் கேள்வி கேட்க முடிகிறது என்றால், அது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தால்தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், சிவகாசி தொகுதியில் அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது. இதற்கிடையே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ராஜேந்திர பாலாஜி விருப்பமனுத் தாக்கல் செய்தார். அவருக்குக் கட்சித் தலைமை சீட் வழங்கியது.
இந்நிலையில், ராஜபாளையம் தொகுதியில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''இந்து, முஸ்லிம், கிறிஸ்து என யாராக இருந்தாலும் அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருப்பேன். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படுவேன்.
அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம்தான் பாமர மக்களுக்கும் ஏழை விவசாயிக்கும் பாதுகாப்பாக இருக்கிறது. அவர் எழுதிய சட்டம்தான் எல்லா நீதிமன்றங்களிலும் அனைத்து வழக்கறிஞர்களின் கரங்களிலும் புத்தகமாக இருக்கிறது. அம்பேத்கர் எழுதிய சட்டத்தால்தான் இன்று பாமரர் கூட பாரதப் பிரதமரைக் கேள்வி கேட்க முடிகிறது.
இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். அதற்காக இரட்டை இலை சின்னத்தில் முத்திரை குத்தி, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யும்படி, உங்களின் இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். வெற்று பெற்ற பிறகு விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வேன்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.