தமிழகம்

இணையவழி புகை மாசு கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? - ஏப்.9-ம் தேதிக்குள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

இணையவழி புகை மாசு கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதிலளிக்க தேசியபசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தர்மேஷ் ஷா, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், “ஒவ்வொரு மாநில மாசுகட்டுப்பாடு வாரியமும் தங்கள்மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை மாசுவை இணையவழியில் உடனுக்குடன் கண்காணிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அதன்மூலம் இணையவழியில் கிடைக்கும் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஓசிஇஎம்எஸ் (Online Continuous Emission Monitoring Sensors) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

ஓசிஇஎம்எஸ் என்பது இணையம் வாயிலாக அந்தந்த மாநிலங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் வெளியேறும் புகை மாசுவின் அளவை, புகை போக்கியில் பொருத்தப்படும் கருவி அளவிட்டு, உடனடியாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் தன்னிச்சையாக பதிவு செய்துவிடும். அதை பொதுமக்கள் எளிதில் பார்க்கலாம். இதன்மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தவிர பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை 24 மணி நேரமும் கண்காணித்து, தங்களின் அடிப்படைஉரிமையான சுத்தமான காற்றைசுவாசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த தீர்ப்பை, தென் மாநிலங்களில் முறையாக அமல்படுத்தவில்லை. சில மாநிலங்களில் ஓசிஇஎம்எஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அதன் தரவுகளை பொதுமக்களால் பார்க்க முடியாத வகையில், கடவுச்சொல்லை பதிவிட்டு உள்செல்லும் வகையில் உள்ளது. சில மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளங்களில் முந்தைய கால, நிகழ்கால தரவுகள்எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே தென் மாநிலங்களில் ஓடிஇஎம்எஸ் திட்டத்தை செயல்படுத்தி, அதை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன்பு இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இணையவழி புகை மாசுகண்காணிப்பு திட்டத்தை (ஓசிஇஎம்எஸ்) மத்திய, மாநிலஅரசுகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், அடுத்த விசாரணை நாளான ஏப்ரல் 9-ம்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT