சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதில் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக முதல்கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 100 முதல்150 வீரர்கள் வரை இருப்பர். இதில் 12 கம்பெனி துணை ராணுவப் படையினர் சென்னைக்கும், மீதமுள்ள 33 கம்பெனியினர் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.
தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க, தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவரப்படலாம் என்று காவல் துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் அனைத்துமாநில எல்லைகளிலும் தீவிர வாகனசோதனை நடத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எல்லைப் பகுதி மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சில அறிவிப்புகளை கொடுத்துள்ளனர்.
தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலஎல்லைகளில் ஏற்கெனவே வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று (15-ம் தேதி) முதல் வாகன சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாநில எல்லைகளில் நடக்கும் சோதனையில் இன்றுமுதல் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 8 வழிகளில் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்களில் அதிகஅளவில் துணை ராணுவப்படை வீரர்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.