கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 3 மணி நேரம் சிக்கியதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு, வழக்கறிஞர் கே.பாலு நேற்று ஆஜராகி, கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியை போலீசார் சரிவர செய்யததால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே, இதுதொடர்பாக அரசுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி வாதிடுகையில், ‘‘காவல்துறையினர் தெருவுக்கு தெரு நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியதாவது: கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நானும் 3 மணி நேரம் சிக்கினேன். இது, வழக்கத்துக்கு மாறான பிரச்சினை. இதுபோன்ற நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசல் தொடர்பாக வரும் புகார்களை அரசு ஏற்க மறுக்கக்கூடாது. இயற்கை சீற்றத்தால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இயற்கையை நாம் அழிக்கிறோம். இயற்கை நம்மை அழிக்கிறது என்றார் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்.
பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதிடுகையில், ‘‘மழை வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து, நிலைமையை சீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
அப்போது, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா கூறுகையில், ‘‘இதுபோல வெள்ளம் ஏற்படும்போது மாற்றுப்பாதையை அடையாளம் காண வேண்டும். உயர் நீதிமன்ற பணியாளர் ஒருவர் இரவு 8.30 மணிக்கு பொதுப் போக்குவரத்தில் புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்துள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வருவதால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதையும் காவல்துறையினர் ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்று வாய்மொழியாக உத்தரவிட்டார்.