சேத்தூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்தார்.
ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் தெற்கு வெங்காநல்லூர், நக்கனேரி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், சுந்தர நாச்சியார்புரம், சேத்தூர், வடக்கு தேவதானம், சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இரண்டாம் நாளாக நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ராஜபாளையத்தில் நான் போட்டியிட 63 பேர் விருப்ப மனு கொடுத்தனர். மக்கள் விரும்பியதால் ஆண்டவன் இட்ட கட்டளையை ஏற்று நான் இங்கு போட்டியிடுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் 3 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன்.
அதன் ஒரு பகுதியாக செட்டி யார்பட்டி பேரூராட்சி, சேத்தூர் பேரூராட்சி, ராஜபாளையம் கிராமப் பகுதிகளுக்கு தற்போது முக்கூடல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் குடிநீர் கிடைக்கிறது. மேலும் 5 இடங்களில் மினி கிளினிக் திறக்கப்படும். சேத்தூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.