தமிழகம்

காங்கிரஸ் இருந்தால் தான் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற முடியும்: சிதம்பரம்

இ.ஜெகநாதன்

‘‘காங்கிரஸ் இருந்தால் தான் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற முடியும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த கல்லல் வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

”காங்கிரஸ் பார்ப்பதற்கு சிறிய கட்சியாக இருந்தாலும், ஆழமான வேர்கள் உள்ளன. உலகம் முழுவதும் நடந்த ஆய்வில் 100 வாக்காளர்களில் 25 பேர் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது தான், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். எல்லாரும் முடிவு எடுத்து வருகிறார்கள் என்று நினைப்பது தவறு. காங்கிரஸ் வாக்காளர்கள் சைலன்ட் வாக்காளர்கள்.
கூட்டணியில் காங்கிரஸ் இல்லாவிட்டால் அவர்கள் சில இடங்களில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். கூட்டணியின் மிக பெரிய வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணம். சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் ஆலங்குடி, திருமயம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணம்.

அவர்கள் தான் பெரிய கட்சி, நாம் சிறிய கட்சி தான். நாம் பெரிய கட்சியை மதிக்க வேண்டும். அவர்கள் சிறிய கட்சியை மதிப்பார்கள். பெரிய மருது, சின்ன மருது சேர்ந்தால் தான் வெற்றி. அதுபோல அவர்களும் (திமுக), நாமும் (காங்கிரஸ்) சேர்ந்தால் தான் மிகப்பெரிய வெற்றி பெற முடியும்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஒரே ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்கியதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கூடுதலாக கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

இந்த முறை சிவகங்கை, மானாமதுரையை பெற முயற்சித்தோம் கிடைக்கவில்லை. கடந்த முறை சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்றோம். இம்முறை 6-லும் வெற்றி பெற வேண்டும்.

இந்தியாவிற்கு மிகப் பெரிய சோதனை வந்துள்ளது. மோடி அரசின் தவறான கொள்கைகளால் பொருளாதாரம் மோசமாக உள்ளது. நான் நிதியமைச்சராக இருந்தபோது கச்சஎண்ணெய் ஒரு பீப்பாய் 105 டாலர் என இருந்தபோதிலும் பெட்ரோல் ரூ.60 முதல் ரூ.65-க்கு விற்பனையானது. தற்போது பீப்பாய் 65 முதல் 70 டாலர் தான் உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு மோடியின் பண பசி கூடியது தான் காரணம். பெட்ரோலுக்கு ரூ.100 செலுத்தினால் எந்தவித தணிக்கையும் இல்லாமல் அரசுக்கு ரூ.23 சென்றுவிடும். அவர்கள் மக்களை எப்படி உறிஞ்சுவது என்பதை புரிந்து வைத்திருக்கின்றனர்.
வேலையின்மை அதிகரித்துவிட்டது. வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. தற்போது உணவு, மருந்து மட்டுமே மக்கள் வாங்குகின்றனர். முப்பது சதவீதம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு விட்டன.

பல கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இதையெல்லாம் புள்ளி விபரங்களோடு சொல்லியும் மத்திய அரசு அசைய வில்லை. அதை இங்கே இருக்கும் அரசும் கேட்கவில்லை. பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இதை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் தமிழகத்தில் தன்மானமுள்ள அரசு வர வேண்டும். ஏழை மக்கள் வெகுண்டெழுந்தால் தான் அரசின் கொட்டம் அடங்கும். இங்குள்ள அரசு நம்முடைய அரசு அல்ல. பாஜகவின் பினாமி அரசு. பாஜக மற்ற மாநிலங்களில் சில கட்சிகளின் எம்எல்ஏக்களை சில்லரையாக பேசி வாங்கினார்கள். தமிழகத்தில் அதிமுக கட்சியை மொத்தமாக வாங்கிவிட்டார்கள்.

எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும்போது கூட இந்தியில் பேசுகின்றனர். ஒன்பதில் அமுக்கினால் மட்டுமே தமிழில் வருகிறது. தமிழகத்தில் தமிழ் தானே முதலில் வர வேண்டும். இந்தி மூலமாக அனைத்து மொழிகளையும் அடக்கவிட முடியும் என நினைக்கின்றனர். ஒரு இனத்தில் அடையாளம் மொழி.

வெவ்வேறு மதத்தை, சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம்மை பிணைப்பது மொழி. பேசாத மொழி, எழுதாத, ஆட்சி செய்யாத மொழி அழிந்துவிடும். ஓராண்டிற்கு 100 மொழிகள் அழிந்து வருகின்றன.

வடநாடு கலவர பூமியாக மாறிவிட்டது. அங்கெல்லாம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ முடியாது. நம்மை பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் ஒன்று தான். பாஜகவை 20 இடங்களிலும் தோற்க வேண்டும். காரைக்குடியில் படுதோல்வி அடைய வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT