தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காததால் எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் கண்ணீர் வடித்த நிலையில், அவரின் ஆதரவாளர்களும் கண்ணீர் சிந்தினர்.
கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். ஏற்கெனவே அமைச்சராகவும் இருந்தவர். இவருக்குத் தற்போது தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதற்கு அதே மாவட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் காரணம் என்று தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ஏற்கெனவே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''2021 தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது என்னைவிட என் தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில், என்னுடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சீட் வழங்கப்படவில்லை.
அதனால் கட்சியின்மீது சேற்றை வாரி இறைக்கத் தயாராகவில்லை. ஆனால் எந்த அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றது என்பது தெரியவில்லை. டிடிவி ஆதரவோடு இருந்ததால்தான் இடம் கிடைக்கவில்லை என்ற கருத்து தவறானது. என் மாவட்ட அமைச்சர்கள் என்னைப் பற்றித் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால் அது மக்களுக்கு எதிரான முடிவு. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் என்னைப் பார்க்கக் கூடாது. மக்களுக்கு ஆற்றிய பணிகளைத்தான் பார்க்க வேண்டும்'' என்று தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொகுதியில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், எனது நிலை எந்தத் தொண்டனுக்கும் வரக்கூடாது கண்ணீர் வடித்தார். தொடர்ந்து பேச முடியாமல் அவர் தலைகுனிந்து நின்ற நிலையில், அவரின் ஆதரவாளர்களும் கண்ணீர் சிந்தினர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலும் இம்முறை போட்டியிட சீட் கிடைக்காததால் கண்ணீர் மல்கப் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.