திமுக அளித்த அனைத்து தேர்தல் அறிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான டி. ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக ஆகிய இரு முதன்மைக் கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. திமுக போட்டியிடும் 173 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சைதாப்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் டி . ஆர்.பாலு பேசும்போது, “ தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாளை முதல் திமுக தலைவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றபடும். இது ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த முதல் மாதத்திலேயே தெரியும். திமுக அளித்த 504 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை.
மேலும், சென்னை மேயராக மா. சுப்ரமண்யம் செய்த பணிகள் அனைவருக்கும் தெரியும். அவரால் சைதாப்பேட்டை மக்கள் பயனடைந்தார்கள். எனவே சைதை மக்கள் இமாலய வெற்றியை மா. சுப்ரமணியத்துக்கு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.