தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர்களுடன் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் மது மகாஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வே.ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர். 
தமிழகம்

செலவின பார்வையாளர்களுடன் சிறப்பு அதிகாரி மது மகாஜன் ஆலோசனை; சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்: 118 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் செலவினம் தொடர்பாகமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 119 செலவின பார்வையாளர்களுடன், சிறப்பு செலவின பார்வையாளர் மது மகாஜன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம்தேதி பொதுத் தேர்தல் நடைபெறஉள்ளது. கடந்தகால தேர்தல்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அடிப்படையில் தமிழகம் செலவினம்தொடர்பான கவனம் பெற்ற மாநிலமாக உள்ளதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதைக் கண்காணித்து தடுக்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

குறிப்பாக, செலவினம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள் மது மகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோரை சிறப்புபார்வையாளர்களாக நியமித்துள்ளது. இதுதவிர, மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளைக் கண்காணிக்க 118 செலவின பார்வையாளர்கள், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஒருவர் என 119 பேரை நியமித்துள்ளது.

மது மகாஜன், பாலகிருஷ்ணன் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே தமிழகம் வந்து பல கட்டமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியதால், மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட செலவின பார்வையாளர்கள் தமிழகம் வந்து பணியில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி வாயிலாக செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் செலவின பார்வையாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வருமானவரித் துறை, பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தவும், செலவின தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 118-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் செலவின பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT