தஞ்சாவூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு இரு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கும், சக மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 11-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 619 மாணவிகளுக்கும், 35 ஆசிரியைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதையடுத்து பள்ளியில் உள்ளஅனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பள்ளிக்கு 2 வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த பல நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த 12-ம் தேதி 37 பேருக்கும், நேற்று முன்தினம் 23 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர் பள்ளியில் 4 பேருக்கு...
அரியலூரை அடுத்த சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், விடுதி வார்டனுக்கு அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விடுதி பணியாளர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், விடுதி சமையலர்கள் 2 பேர், 10-ம்வகுப்பு மாணவர் என மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.