தமிழகம்

முதல் முறை வாக்காளர்கள் இ-எபிக் பதிவிறக்கம் செய்ய இன்றும் முகாம்

செய்திப்பிரிவு

முதல் முறை வாக்காளர்கள், தங்கள்வாக்காளர் அடையாள அட்டையை இ-எபிக் ஆக கைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தலுக்கான மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டுதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 21 லட்சத்துக்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால்மூலம் தற்போது அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் முதல் முயற்சியாக,வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது விண்ணப்பித்தவர்களுக்கு இ-எபிக் என்ற கைபேசியில் வாக்காளர் அட்டையை பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி முதல் முறை வாக்காளர்கள், ‘voterportal.eci.gov.in’ என்ற இணைப்பில் சென்று பதிவு செய்தால், கைபேசிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அட்டையை கைபேசியில் பெறலாம்.

அதன்பின் அதை ‘பிரின்ட் அவுட்’ எடுத்து ஆவணமாக பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். இந்த தொழில்நுட்பம் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைபேசியில் இந்த இ-எபிக் ஐ பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறையை காட்டவும் மார்ச் 13 (நேற்று) மற்றும் 14 (இன்று) ஆகிய இரு தினங்களும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் தொடங்கியது. தேர்தல் துறை சார்பில் முகாம்களில் கணினியுடன் அமர்ந்திருப்பவர்கள், அங்கு வரும் முதல் முறை வாக்காளர்களுக்கு இ-எபிக்கை பதிவிறக்கம் செய்யும் முறையை தெரிவித்து, அவர்கள் கைபேசிக்கு பதிவிறக்கம் செய்து தருகின்றனர். இந்த முகாம் இன்றும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT